×

லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்கா காந்திக்கு அனுமதி : விவசாயிகளை சந்திக்க புறப்பட்ட காங்., தலைவர்கள்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் செல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது சாலையில் நடந்து சென்ற விவசாயிகள் கூட்டத்தில், பாஜ.வினரின் கார் தாறுமாறாக ஓடி பலர் மீது மோதியது.இதில் 4 விவசாயிகள் பலியாயினர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கி உள்ளது. விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. அவர் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள உபி அரசு, எதிர்க்கட்சி தலைவர்கள் யாரையும் நுழைய விடாமல் தடுத்து வருகிறது. லக்கிம்பூருக்கு வந்த உபி மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை சிதாபூரில் மடக்கி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, பிரியங்கா காந்தியை சந்திக்க சென்ற சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேலையும்  லக்னோ விமான நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், விமான நிலைய வளாகத்திலேயே கீழே அமர்ந்து முதல்வர் பாகேல் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, லக்கிம்பூர் கேரி செல்ல இருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை காரணமாக உ.பி. அரசு அனுமதி மறுத்தது.

இந்த நிலையில்,  உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் செல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க கட்சி சார்பில் 5 பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி விமானம் மூலம் உத்தரபிரதேசம் செல்கிறார். அவருடன் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஆகியோரும் சென்றுள்ளனர்.உ.பி. லக்கிம்பூரில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல் குழு பயணம் மேற்கொண்டுள்ளனர்.


Tags : Rahul ,Priyanka Gandhi ,Lakhimpur , லக்கிம்பூர் , ராகுல், பிரியங்கா காந்தி
× RELATED இன்று மாலை இந்திய ஒற்றுமை நீதி...