ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் வந்து செல்லும் பொதுமக்கள்-கொரோனா தொற்று பரவும் அபாயம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் வந்து செல்லும் பொதுமக்களால் கொரோனா தொற்று பரவும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும், கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 64 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 768 பேர் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போது 98 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 39 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் என மொத்தம் 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,024 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும்பாலானோர் கொரோனா தொற்று பரவல் குறித்த அச்சமின்றி முகக்கவசம் அணியாமல் வந்து செல்கின்றனர். பஸ்களில் செல்லும்போது முகக்கவசம் அணியாமலே பயணிக்கின்றனர். இதனால் ராணிப்பேட்டையில் தொற்று பரவும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தற்போதைய ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்கள், தொழிற்ச்சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் பஸ், ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முத்துக்கடை பஸ் நிலையத்தில் இருந்து  வெளி இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இதில், ஒருபகுதியாக நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்திற்கு வந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் கொரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள்  கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் கொரோனா விதிகளை மீறுகின்றனர்.

தற்போது ஒற்றை இலக்க எண்ணில் உள்ள கொரோனா தொற்று பாதிப்பு இத்தகைய காரணங்களால் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நிற்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயகரமான சூழல் உள்ளது.

எனவே, ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்வதை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், என்று தெரிவித்தனர்.

Related Stories:

More
>