×

ஆற்காடு, திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் ஏற்றிய வாகனங்கள்-கலெக்டர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

ஆற்காடு : ஆற்காடு மற்றும் திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான தேர்தல் பொருட்கள்  ஏற்றிச்சென்ற வாகனங்களை நேற்று கலெக்டர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.ஆற்காடு மற்றும் திமிரி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற உள்ளது. அதற்கு  தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் சார்பில் செய்யப்பட்டது. திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து திமிரி ஒன்றியத்துக்குட்பட்ட 226 வாக்குச்சாவடி மையங்களுக்கும்,  ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஆற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட 187 வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு பொருட்கள் தயார் படுத்தப்பட்டு லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்படும் பணிகள் நடைபெற்றது.

இப்பணிகளை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து  மண்டல தேர்தல் அலுவலர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தேர்தலில் எந்தவிதமான பிரச்னையும் இன்றி நேர்மையாகவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கி வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார். அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.லோகநாயகி,  உதவி இயக்குனர் ஊராட்சிகள் குமார்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், ஜெய, சாந்தி, செந்தாமரை மற்றும் மண்டல தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பணி அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

ஆற்காடு மற்றும் திமிரி ஒன்றியத்தில் தலா 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 15 மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு 15 கார்களும், தேர்தல் பொருட்களை ஏற்றிச்செல்ல 15 லாரிகளும்,  முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு பொருட்களை  கொண்டு செல்ல வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்  திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட 1,880 வாக்குச்சாவடி அலுவலர்கள், ஆற்காடு ஒன்றியத்துக்குட்பட்ட 1,526 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு  மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டு  தேர்தல் பணி ஆணைகள் வழங்கப்பட்டது. அதனை வாக்குச்சாவடி அலுவலர்கள் பெற்றுக்கொண்டு நேரடியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று இன்று காலை வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து  முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டனர்.

வாலாஜா: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 240 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவுக்கான பொருட்கள் தயார் படுத்தப்பட்டு லாரி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதற்காக வாலாஜா ஒன்றியம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலத்திற்கு தலா ஒரு அலுவலர் வீதம் பணியமர்த்தப்பட்டனர்.

மேலும் 1,887 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் நேற்றே வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவசரகால தேவைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேற்படி தேர்தல் சம்பந்தமான ஏற்பாடுகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயதி, உதவி இயக்குநர் குமார், வாலாஜா பிடிஓக்கள் சித்ரா மற்றும் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags : Arcot ,Thiri Panchayat Union , Arcot: Election materials required for polling centers from Arcot and Thiri Panchayat Union offices
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலம்