திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்-சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் மழையால் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 104 கன அடி தண்ணீர் வருகிறது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.மேலும், திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில், சில நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் மழையால், நீர்நிலைகள் நிரம்ப தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள சிறிய ஏரிகள் பெரும்பாலும் 50 சதவீத கொள்ளளவை கடந்துள்ளன. 60க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. அதேபோல், பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் பெரிய ஏரிகளும் குறிப்பிடத்தக்க அளவில் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் நீர்வரத்து பகுதியில் பெய்த மழையால், அணைக்கு வினாடிக்கு 104 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் தற்போது 82.50 அடி நீர் இருப்பு உள்ளது.

அதேபோல், செங்கம் தாலுகா குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 60 அடியில் 49.86 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 160 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கலசபாக்கம் தாலுகா மிருகண்டா அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 22.97 அடியில் 13.45 அடி நிரம்பியிருக்கிறது. அதேபோல், போளூர் தாலுகா செண்பகத்தோப்பு அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 62.32 அடியில் 52.68 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.

வெம்பாக்கத்தில் 105 மிமீ மழை பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில்  கடந்த 4 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பகலில்  விட்டுவிட்டு லேசான மழையும், இரவில் பரவலான கனமழையும் பெய்கிறது. மாவட்டத்தில்  நேற்று மாலை பதிவான மழை நிலவரப்படி, அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 105 மிமீ  மழை பதிவானது. செய்யாறில் 75 மிமீ, திருவண்ணாமலையில் 65 மிமீ,  கலசபாக்கத்தில் 46 மிமீ, போளூரில் 89 மிமீ பதிவானது. மேலும், திருவண்ணாமலை  உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து  கனமழை பெய்தது.

Related Stories:

More
>