×

திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைதீர்வு கூட்டம் யூரியா, விதை நெல் தட்டுபாடின்றி வழங்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை :  யூரியா, விதை நெல் தேவைக்கேற்ப வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் முதல் அனைத்து குறைதீர்வு கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. அதன்படி, தாலுகா அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது. அதன்படி, குறைதீர்வு கூட்டங்களை, உரிய விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு பிறகு நேற்று 12 தாலுகா அலுவலகங்களிலும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட அளவிலான அலுவலர்கள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ வெற்றிவேல் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. அதில், வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகள் விபரம்:

யூரியா தட்டுப்பாடு பரவலாக உள்ளது. சில இடங்களில், கூடுதல் விலைக்கு விற்கின்றனர். எனவே, விவசாயிகளின் தேவைக்கு ஏற்றபடி யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், விதை நெல்லும் தேவையான அளவில் வழங்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை எடை போட பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வருகிறது. எனவே, ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்க வேண்டும். வேளாண்துறை சார்பில் வழங்கப்படும் மானியங்கள், திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். பட்டா மாற்றம் தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். சிறப்பு முகாமில் அளித்துள்ள மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேணடும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.செய்யாறு:  செய்யாறு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று தாலுகா அளவில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் தலைமை தாங்கினார். அனக்காவூர் வேளாண்மை உதவி இயக்குனர் குமரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல், வெம்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சிப்காட் தனித்துணை ஆட்சியர் நாராயணன் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் சிவபெருமாள், தாசில்தார் குமாரவேலு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டங்களில், செய்யாறு தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். உழவர் பாதுகாப்பு அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு தீபாவளி போனசாக ₹5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த இடையங்கொளத்தூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. வேளாண்மை அலுவலர் இலக்கியா தலைமை தாங்கினார். பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அரசு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர்.இதில், உதவி இயக்குனர் சுரேஷ்பாபு, தாசில்தார்கள் கோவிந்தராஜ், ஹரிதாஸ், பிடிஓக்கள் பாஸ்கரன், மோகனசுந்தரம், மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் தினேஷ், உதவி விதை அலுவலர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆரணி: ஆரணி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைசாமி தலைமை தாங்கினார். தாசில்தார் சுபாஷ்சந்தர், பிடிஓ  சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். ஆர்டிஓ கவிதா கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கூட்டத்தில், ஏரி நீர்வரத்து கால்வாய், உபரிநீர்  கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். கூடுதலாக  நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் யூரியா இருப்பு அதிகரித்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆரணியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Tags : Tiruvandamalaya District , Thiruvannamalai: Farmers demand compensation for urea and seed paddy
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...