கிராமங்களில் பொது நூலகம் வசதி-அய்யாத்துரைபாண்டியன் பேச்சு

தென்காசி : தென்காசி வடக்கு மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட 10-வது வார்டு களப்பாகுளம் ஊராட்சியிலுள்ள களப்பாகுளம் கிராமத்திலும் மற்றும் பாரதிநகர் பகுதியிலும் ஒன்றியக்கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அமமுக வேட்பாளர் கோட்டைத்துரையை ஆதரித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன் குக்கர் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: விவசாயத்தை நம்பி வாழும் கிராம மக்களுக்கு கருப்பாநதி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பாக வெற்றி பெறும் கவுன்சிலர்கள் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள். விவசாயிகள் பயன்பெரும் வகையில் அனைத்து நல திட்டங்களும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்கவும் தண்ணீர் வசதி இல்லாத கிராமங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி, வீடுகளுக்கு தனியாக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபடும்.

அனைத்து கிராமங்களுக்கும் பொது கழிப்பறை வசதி, மற்றும் நூலக வசதி ஏற்படுத்தி சரியான முறையில் பராமரிக்கப்படும். சாலைகள் இல்லாத கிராமங்களுக்கு தரமான சாலை அமைத்து பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து தரப்படும்.பெண்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு முன்னுரிமை கொடுத்து சுய உதவி குழுக்கள் அமைத்து அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், முதியோர் உதவித்தொகை மற்றும் அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் தகுதியானவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபடும்.

மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்த அனைத்து கிராமங்களிலும் நூலக வசதி செய்து தரப்படும்.ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கிராமப்புற இளைஞர்களை ஒன்றிணைத்து விளையாட்டு போட்டிகளை நடத்தி,பரிசுகள் வழங்கி ஊக்கம் அளிக்கப்படும். மேலும் விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள் அமைத்து தரப்படும்.கிராமங்களில் உள்ள அனைத்து கோவில்களையும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் புனரமைப்பு செய்து தரப்படும்.

அரசு அதிகாரிகள் ஏழை,எளிய கிராமப்புற மக்களுக்கு உரிய ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தாலோ, தாமதப்படுத்தினாலோ என் கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் 24 மணி நேரத்திற்குள் தீர்வு காணப்படும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை,கிராமங்களை ஒன்றிணைத்து குறைகளை கேட்டறிந்து குறைகளை தீர்த்து வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>