மன்னார்குடி அருகே மூவாநல்லூரில் காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டம்-திருச்சி மத்திய மண்டல ஐஜி நேரில் ஆய்வு

மன்னார்குடி : மன்னார்குடி அருகே மூவாநல்லூரில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட உள்ள இடத்தினை திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.காவல்துறையில் பணியாற்றும் அனைத்து தரப்பினரின் நலன் காக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் காவல் துறையினருக்கு சொந்தமாக வீடு கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மூவாநல்லூரில் காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம் வீடுகள் கட்ட ஏதுவாக 4.66 ஏக்கர் பரப்பளவில் இடம் வாங்கப்பட்டுள்ளது.இந்த இடத்தில் காவலர்களுக்கு 60 வீடுகளும், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு 28 வீடுகள் என மொத்தம் 88 தனித்தனி வீடுகள் கட்டப்பட உள்ளது. தற்போது நிலங்களை சமன் படுத்தும் பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் மூவாநல்லூர் கிராமத்திற்கு நேரில் வந்து காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு அங்கு நடைபெற்று வரும் நிலம் சமன்படுத்தும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.மேலும், குடியிருப்பின் உத்தேச வரைபடம் மற்றும் திட்டதை எவ்வாறு செயல் படுத்துவது என்பது குறித்து திருவாரூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார், தமிழ் நாடு காவலர் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர் முருகன் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது, டிஎஸ்பி பாலச்சந்தர், பயிற்சி டிஎஸ்பி இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவிப்பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

More
>