அதிமுக மாவட்ட செயலாளரை தாக்கிய வழக்கு!: முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முறையீடு..!!

மதுரை: அதிமுக மாவட்ட செயலாளரை தாக்கிய வழக்கில் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முறையீடு செய்திருக்கிறார். ராஜேந்திர பாலாஜி சார்பாக மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி புகழேந்தி முன்பாக இந்த முறையீடை வைத்துள்ளார். கடந்த 24ம் தேதி உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலி செல்லும் போது சாத்தூர் வெங்கடாஜலபுரத்தில் கட்சியினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆகியோரும் வந்திருந்தனர்.

அச்சமயம் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கிளை செயலாளர் வீராவுரெட்டி கோஷமிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதிமுகவினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் வீராவுரெட்டி தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேர் மீது சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரின் கீழமை நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தொடர்ந்து அந்த மனுவை அவரே திரும்ப பெற்றுக்கொண்டதால் நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் காவல்துறையின் கைதிக்கு அஞ்சி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் வழங்க அவசர வழக்காக விசாரிக்க கோரி ராஜேந்திர பாலாஜி முறையீடு வைத்திருந்தார். எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Stories:

More
>