நீர்மட்டம் 102 அடியை எட்டியது பவானிசாகர் அணையில் இருந்து 2300 கனஅடி உபரிநீர் திறப்பு-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சத்தியமங்கலம் : நீர்பிடிப்பு  பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து  அதிகரித்து அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதை தொடர்ந்து அணையில்  இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின்  முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8  டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால்  ஏற்கனவே பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கும்,  பவானி ஆற்று பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

105 அடி உயரமுள்ள  பவானிசாகர் அணையில் அக்டோபர் மாத இறுதிவரை 102 அடி வரை மட்டுமே நீர் தேக்க  வேண்டும் என விதிமுறை உள்ளதால் தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  பெய்து வரும் கனமழை காரணமாக பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.

நேற்று  மதிய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,600 கன அடியாக இருந்ததால்  பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 102 அடியை எட்டியது.  இதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றின்  கீழ்மதகுகள் வழியாக 2,300 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டது.

ஏற்கனவே  கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300  கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள  நிலையில் பவானி ஆற்றில் உபரி நீராக 2,300 கன அடி திறக்கப்பட்டுள்ளதால்  மொத்தம் அணையில் இருந்து 4,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.   அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி  நீரின் அளவு மாறுபடும் எனவும், பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள்  மற்றும் துணி துவைக்க செல்லும் பெண்கள் பாதுகாப்பாக இருக்குமாறு  பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

More
>