புதுக்கோட்டையில் விவசாயியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.97 லட்சம் கொள்ளை!: வங்கி கணக்கு எண், ஓடிபி பெற்று வடமாநில கும்பல் கைவரிசை..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வங்கி வேளாண்துறை அதிகாரி பேசுவதாக கூறி ஓடிபி எண்ணை பெற்று வங்கி கணக்கில் இருந்து 3 லட்சம் ரூபாயை வடமாநில கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியானைப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயியான இவர், கந்தர்வகோட்டை அருகே புதுநகரில் உள்ள இந்தியன் வங்கியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கணக்கு வைத்து வரவு, செலவு செய்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜேந்திரனுக்கு போன் செய்த மர்மநபர் ஒருவர், இந்தியன் வங்கியில் இருந்து வேளாண்துறை அதிகாரி பேசுவதாகவும், விவசாயிகள் பலன் பெரும் வகையில் அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என  கூறியதாக தெரிகிறது.

இதனை அடுத்து அந்த நபர் கேட்ட வங்கி கணக்கு எண், ஓடிபி உள்ளிட்ட விவரங்களை ராஜேந்திரனும் அவருடைய போனை பயன்படுத்தி அவருடைய பேரனும் பகிர்ந்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணிற்கு வங்கி கணக்கில் இருந்து 2 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், வங்கியை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க அவர்கள் வழிகாட்டியதை அடுத்து, அவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.

ராஜேந்திரன் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்திருக்கும் சைபர் கிரைம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த வங்கி மோசடி கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது. வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வரும் ஓடிபி எண்ணை யாருக்கும் பகிர கூடாது எனவும், யாரேனும் ஓடிபி எண்ணை கேட்டால் வங்கி மற்றும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க காவல்துறையினர் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

Related Stories:

More
>