×

மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட இடங்களில், சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் விளக்கம்

சென்னை: மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட இடங்களில், சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தல்கள் மற்றும் 28 மாவட்டங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் 6ம் தேதி (இன்று) மற்றும் 9ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அதன் அடிப்படையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பல்வேறு பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; காலை 9 மணி வரை 7.72% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 12,318 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 129 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு முதற்கட்ட வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. காவலர்கள், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என 39,408 பேர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குச்சாவடி அருகே வாக்கு சேகரித்தவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மஹாயாள அமாவாசை, மழை காரணமாக வாக்குப்பதிவில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பொன்னங்குப்பத்தில் தேர்தலை மக்கள் புறக்கணித்தனர். தனி ஊராட்சி கோரிய மக்களுடன் ஆட்சியர், காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட இடங்களில், சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 74 மையங்களில் எண்ணப்பட உள்ளன.

தென்காசி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் காலை 9 மணி வரை 10.78% வாக்குகள் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 6.90% வாக்குகள் பதிவாகியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கிவிட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிசெய்யும் பணிகள் அக்.17-க்கு பின் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Electoral Commissioner ,Palanikumar , Arrangements have been made to repair the polling booths affected by the rains: State Election Commissioner Palanikumar
× RELATED தேர்தல் பத்திரம் வாங்குவதில் புதிய...