×

நாளை மறுநாள் இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினம்!: ஹிண்டன் விமான தளத்தில் அதிகாரிகள் முன்னிலையில் வீரர்கள் சிறப்பு ஒத்திகை..!!

காஸியாபாத்: இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அணிவகுப்பு மற்றும் சாகச பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி விமானப்படை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விமானப்படையின் 89வது ஆண்டு விழாவை ஒட்டி அதிகாரிகள் முன்னிலையில் அணிவகுப்பு, இசைநிகழ்ச்சி, விமான சாகச ஒத்திகைகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நடுவானில் வீரர்களின் சிலிர்க்க வைக்கும் சாகச பயிற்சி அங்குள்ள அதிகாரிகளை பெரிதும் கவர்ந்தது.

உத்திரப்பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் இதற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன. நாளையும் விமானப்படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட உள்ளனர். இதையடுத்து நாளை மறுநாள் நடைபெறவுள்ள விமானப்படை தின கொண்டாட்டங்களில் கலந்துக்கொண்டு அவர்கள் பார்வையாளர்களுக்கு சாகச விருந்து படைக்க உள்ளனர். விமானப்படை தினத்தில், வாசிர்பூர் பாலம்- கர்வால்நகர் – அஃப்ஜல்பூர்- ஹிந்தன், ஷாம்லி- ஜிவானா- சாந்திநகர்- ஹிந்தன், ஹாப்பூர்- பில்குவா- காசியாபாத்- ஹிந்தன் ஆகிய பகுதிகளில் விமானங்கள் தாழ்வாகப் பறக்கும்.

காலை 8 மணிக்கு, பிரசித்தி பெற்ற ஆகாஷ் கங்கா குழுவைச் சேர்ந்த வீரர்கள்,  ஏஎன்-32 ரக விமானத்திலிருந்து தங்களது வண்ணமயமான விதானங்கள் மூலம் கொடியுடன் வானில் குதிப்பார்கள். பாரம்பரிய விமானம், நவீன போக்குவரத்து விமானம் மற்றும் போர் விமானம் ஆகியவை விமான அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும். கண்கவர் விமான சாகச நிகழ்வுகளுடன் இந்த விழா காலை 10.52 மணிக்கு நிறைவடையும்.

Tags : Indian Air Force ,Hinton Airport , Indian Air Force, 89th Anniversary, Air Force Veterans
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...