9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது: மழையையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் மக்கள்

தென்காசி: 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தல்கள் மற்றும் 28 மாவட்டங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் 6ம் தேதி (இன்று) மற்றும் 9ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 27,002 பதவியிடங்களுக்கு 98,151 வேட்புமனுக்களும், 28 மாவட்டங்களுக்கான தற்செயல் தேர்தலில் 789 பதவியிடங்களுக்கு 2,547 வேட்புமனுக்களும் பெறப்பட்டது.

மொத்தம் 27,791 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், 1,246 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 15,287 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்களும் ஒதுக்கப்பட்டது. இதில் 3,346 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தற்போது 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக ஆகிய கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதனால், ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி நிலவுகிறது. இதுதவிர, சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதனால், கடந்த 10 நாட்களாக வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வீடு வீடாக, வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில், நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

Related Stories:

More
>