×

ராஜஸ்தானை சுருட்டியது மும்பை

ஷார்ஜா: ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். லூயிஸ், ஜெய்ஸ்வால் இருவரும் ராயல்ஸ் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 12 ரன் எடுத்து கோல்டர் நைல் வேகத்தில் இஷான் வசம் பிடிபட்டார். லூயிஸ் 24 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் வெளியேறினார். கிளென் பிலிப்ஸ் 4 ரன்னில் பெவிலியன் திரும்ப, ராஜஸ்தான் 9.4 ஓவரில் 50 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்நிலையில், மில்லர் - திவாதியா இணைந்து 6வது விக்கெட்டுக்கு 21 ரன் சேர்த்தனர்.

திவாதியா 12 ரன் எடுத்து நீஷம் வேகத்தில் இஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் கோபால் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேற, மில்லர் 15 ரன், சேத்தன் சகாரியா 6 ரன் எடுத்து கோல்டர் நைல் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்தது. குல்தீப் (0), முஸ்டாபிசுர் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் கோல்டர் நைல் 4 ஓவரில் 14 ரன்னுக்கு 4 விக்கெட், நீஷம் 4 ஓவரில் 12 ரன்னுக்கு 3 விக்கெட், பும்ரா 4 ஓவரில் 14 ரன்னுக்கு 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இதைத் தொடர்ந்து, மும்பை அணி 20 ஓவரில் 91 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது.

மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி ஆரம்பத்திலேயே அதிரடியில் இறங்கியது. எனினும் சகாரியா பந்தில் ரோகித் சர்மா 22 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து கேட்ச் கொடு்த்து அவுட் ஆனார். சூர்யகுமார் 13 ரன்னில் அவுட் ஆனார். எனினும் மறுமுனையில் அதிரடி காட்டிய இஷான்கிஷன் 50 ரன் (25 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தார். வெற்றிக்கு தேவையான ரன்னை சிக்சராக விளாசினார். இவருக்கு துணையாக ஹர்திக் பாண்டியா 5 ரன்னுடன் களத்தில் இருந்தார். இறுதியில், மும்பை அணி, 8.2 ஓவரில் 94 ரன் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags : Mumbai , Rajasthan, Mumbai, IPL, Cricket
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!