அஞ்சல்துறை படிவங்களில் தமிழ் அகற்றம்: மார்க்சிஸ்ட் எம்பி கண்டனம்

மதுரை: அஞ்சல் துறை பொதுமேலாளருக்கு மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: அஞ்சல் துறையில் பண விடை படிவம் தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால் மின்னணு படிவங்கள் வந்தவுடன் பண விடையில் தமிழுக்கு விடை கொடுக்கப்பட்டு விட்டது. சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்களும் தமிழில் இல்லை. பொதுவாக, அரசு அலுவலகங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை எளிதில் பெற வழி வகை செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒரு சேவையை பெறும்போது அதற்கான விதிகளை, நிபந்தனைகளை முழுமையாக அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அஞ்சல் சேமிப்புகளை எடுக்கும்போது இரு தரப்பிற்கும் உள்ள பொறுப்புகள் தெளிவாய் பகிரப்பட வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்கள் எழும். வாடிக்கையாளர்களே இதில் பாதிக்கப்படுவார்கள். இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழிகளில் சேவையை தருவது ஒன்றிய அரசு நிறுவனங்களின் கடமையாகும். வாடிக்கையாளர் சேவை தொடர்பான எல்லா படிவங்களும் தமிழில் இருப்பதையும், அதற்கேற்ற தொழில்நுட்ப ஏற்பாட்டை இணைய வழியில் தருவதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>