×

அரசு வேலை வாங்கித் தருவதாக இபிஎஸ், ஓபிஎஸ் பெயரில் போலி பணி ஆணை: தூத்துக்குடி எஸ்பியிடம் புகார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (34). எம்காம் பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபடி அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். இவருக்கு இதே பகுதியைச் சேர்ந்த திருமால் மூலம் பரமன்குறிச்சியை சேர்ந்த கணேசன் (53) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர், ரமேசிடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிடிஓ அலுவலகங்களில் அரசு பணி வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ரமேஷ், கடந்த 15.1.2020ல் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். இதனை பெற்றுக் கொண்ட கணேசன், பிடிஓ அலுவலகத்தில் கிளார்க் பணிக்கான பணி ஆணையை அரசிடம் இருந்து பெற்றது போல் வழங்கியுள்ளார்.

ஆணையில் முன்னாள் முதல்வர்கள் ஓபன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் என போலியான கையெழுத்துகளும், ரப்பர் ஸ்டாம்ப் இருந்துள்ளன. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமேஷ், கணேசனிடம் சென்று கொடுத்த பணத்தை  திரும்ப கேட்டுள்ளார். அதனை அவர் தர மறுத்துவிட்டதால் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அப்போது சிறிது நாளில் தருவதாக உறுதியளித்துவிட்டு பின்னர் தற்போது வரையில் பணத்தை திரும்ப தரவில்லை. இதையடுத்து ரமேஷ், தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமாரிடம் இதுகுறித்து புகார் அளித்தார்.


Tags : EPS ,OPS ,Thoothukudi SP , Government Jobs, EPS, OPS, Thoothukudi, SP
× RELATED வேட்பாளர் படிவங்களில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்...