பவானிபூரில் வெற்றி பெற்ற மம்தாவுக்கு நாளை பதவிப் பிரமாணம்: ஆளுநர் செய்து வைக்கிறார்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், பவானிப்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜ வேட்பாளரை காட்டிலும் 58,835 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மேலும், ஜாங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட இக்கட்சியை சேர்ந்த ஜாகிர் உசேன், சம்செர்கன்ச் தொகுதியில் போட்டியிட்ட அமிருல் இஸ்லாம் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி நாளை எம்எல்ஏ.வாக பதவியேற்க உள்ளார்.

மேற்கு வங்க நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்  பார்தா சட்டர்ஜி, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநகர் ஜெகதீப் தங்கார் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளார். மாநில சட்டப்பேரவையில் நாளை காலை மம்தா உட்பட 3 எம்எல்ஏ.க்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

அடம் பிடிக்கும் ஆளுநர் இந்தியாவில் முதல் முறை

வழக்கமாக, இடைத்தேர்தலில் வெற்றி பெறும் எம்எல்ஏ.க்களுக்கு சபாநாயகர்தான் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். ஆனால், அதற்கான அதிகாரத்தை அவருக்கு ஆளுநர் வழங்க வேண்டும். ஆனால், மம்தாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரத்தை சபாநாயகருக்கு வழங்க ஆளுநர் தங்கார் மறுத்து விட்டார். அதனால், அவரே நாளை மம்தாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இடைத்தேர்தலில் வெற்றிவர்களுக்கு எம்எல்ஏ.வாக ஆளுநரே பதவிப் பிரமாணம் செய்து வைப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை.

Related Stories:

More
>