×

லக்கிம்பூரில் நடந்தது என்ன? 7 வீடியோவில் புதிய தகவல்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜஸ் மிஸ்ராவின் மகன் வந்த கார் மோதி 4 விவசாயிகள் பலியானதாகவும், விவசாயிகள் நடத்திய தாக்குதலில் பாஜவினர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. சமூக வலைதளங்களிலும், ஆங்கில டிவி சேனல்களிலும் வௌியிடப்பட்டு உள்ள 7 வீடியோக்களில் உள்ள காட்சிகள் வருமாறு:
முதல் வீடியோ: சாலையின் இருபுறமும் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி நிற்க, பயங்கர வேகமாக பாஜ.வினரின் கார்கள் செல்கின்றன. கார்களின் மீது சிலர் கற்களை வீசி தாக்குகின்றனர்.

2வது வீடியோ: போராட்டக்காரர்கள், பாஜ.வினர் வந்த கார் ஒன்றை சூழ்ந்து கொண்டு விட மறுக்கின்றனர்.
3வது வீடியோ: விவசாயிகள் சாலையில் நடந்து செல்ல, அவர்களின் பின்னால் வேகமாக வந்த 2 கார்கள்  பலர் மீது மோதுகிறது. இதில் ஒரு விவசாயி தூக்கி வீசப்படுகிறார்.
சிலர் தடுமாறி விழ அவர்களின் மீதும் கார் ஏறிச் செல்கிறது. சிறிது தூரத்திலேயே இரு கார்களும் நிறுத்தப்படுகின்றன.
4வது வீடியோ: விவசாயிகள் மீது மோதிய வாகனத்தில் இருந்து டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் உள்ள சீட்டில் இருந்து அடையாளம் தெரியாத ஒருநபர் இறங்கி ஓடுகிறார். அந்த வாகனத்தின் சக்கரத்தின் அடியில் ஒருவர் படுகாயத்துடன் கிடக்கிறார்.
5வது வீடியோ: வாகனத்தில் இருந்த சிலர் போராட்டக்காரர்களிடம் சிக்கினர். அவர்களை ஒரு கும்பல், கட்டையால் பலமாக அடிக்கிறது.
6வது வீடியோ: ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், பாஜவினர் வந்த வாகனங்களை தீ வைத்து எரிக்கின்றனர்.
7வது வீடியோ: வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர், தலையில் ரத்தம் சொட்ட சொட்ட பேசுகிறார். அவரிடம் சிலர், ‘யார் உன்னை அனுப்பியது’ என கேட்கின்றனர். அதற்கு டிரைவர், அமைச்சர் தன்னை அனுப்பி வைத்ததாகவும், என்ன நடக்கிறது என்பதை பார்த்து விட்டு வருமாறு கூறியதாகவும் சொல்கிறார். உடனே அந்த கும்பல், ‘அவர்தான் கார் ஏற்றி கொல்லச் சொன்னாரா? நாங்கள் உன்னை அடிக்க மாட்டோம். சொல்’ என ஒன்றிய இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா டேனியின் பெயரை சொல்ல கட்டாயப்படுத்துகின்றனர். இந்த வீடியோக்கள் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.

Tags : Lucknow , Lakhimpur, Video, Information, BJP
× RELATED டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி