×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் ஒரு பாடல் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தை சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை சிவா இயக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்க,  ரூபன் எடிட்டிங் செய்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். ‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய படங்களுக்குப் பிறகு சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த் இணைந்துள்ள 3வது படம் ‘அண்ணாத்த’ என்பதால், இப்படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியால் ‘அண்ணாத்த’ படத்தை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 4ம் தேதி அன்று தியேட்டர்களில் வெளியாகிறது. இப்படத்தில், இமான் இசையில் விவேகா எழுதிய பாடலை, மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இப்பாடல் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.‘அண்ணாத்த... அண்ணாத்த... வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு’ என்ற இப்பாடல் காட்சியில், ரஜினிகாந்த் ஸ்டைலாக தோன்றுகிறார். இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை 40 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் இந்தப் பாடலை பார்த்தும், கேட்டும் ரசித்துள்ளனர்.

Tags : Rajinikanth ,Sun Pictures ,YouTube , Sun Pictures, Rajinikanth, ‘Annatha’, YouTube
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...