×

புரோ கபடி சீசன் 8 டிச.22ல் தொடக்கம்

மும்பை:  புரோ கபடி போட்டியின் 8வது சீசன், பெங்களூருவில்  டிச.22ம் தேதி தொடங்குகிறது. புரோ கபடி  போட்டி தொடர்ந்து 7 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. தற்போத பரவல் குறைந்து  தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு புரோ கபடி தொடரின் 8வது சீசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. வீரர்களை தக்கவைப்பது,  வெளியேற்றுவது போன்ற பணிகள் முடிந்து, ஆகஸ்ட் மாத இறுதியில் விடுவிக்கப்பட்ட மற்றும் புதிதாக பதிவு செய்யப்பட்ட வீரர்கள் பங்கேற்ற ஏலம் நடைபெற்றது.

தமிழக வீரர்கள்  சந்திரன் ரஞ்சித் (பெங்களூர்),  பிரபஞ்சன், சாந்தப்பன் செல்வம், அபிஷேக் (தமிழ் தலைவாஸ்), தர்மராஜ் சேரலாதன், இளவரசன் (ஜெய்பூர்),  ஜீவாகுமார் (டெல்லி), வி.அஜீத் (யு மும்பா), சி.அருண் (தெலுங்கு டைட்டன்ஸ்), விஜின் தங்கதுரை (பெங்கால்) ஆகியோரும் பல்வேறு அணிகளுக்கு மாறியுள்ளனர். இவர்களைத்  தவிர  அஜய் தாகூர்,  பிரதீப் நர்வால்,  ரோகித் குமார்,  ராகுல் சவுத்ரி ஆகியோரும் புதிய அணிகளுக்காக விளையாட உள்ளனர்.

இந்நிலையில்  8வது சீசன் டிச .22ம் தேதி பெங்களூரில் தொடங்கும் என்று புரோ கபடி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. கூடவே கொரோனா பரவல் தடுப்பு மற்றும்  வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 8வது சீசன் ஆட்டங்கள் அனைத்தும் பெங்களூருவில் மட்டுமே நடத்தப்படும். போட்டி அட்டவணை, ரசிகர்களுக்கு அனுமதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Pro Kabaddi, Chandran Ranjith, Jivakumar
× RELATED சென்னையில் ஐ.பி.எல். போட்டி; ஏப்.25ல் டிக்கெட் விற்பனை..!!