செங்கை மாவட்ட 4 ஒன்றியங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களில் இன்று, ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புனிததோமையார் மலை, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், லத்தூர் ஆகிய ஒன்றியங்களில் அடங்கிய மாவட்டக் கவுன்சிலர்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான முதற்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை முதலே தேர்தல் நடத்தப்படும் 1,064 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 21 வகையான பொருட்கள், வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி ஆகியவை வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இன்று தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் 262 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 77 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், திருப்போரூர் ஒன்றியத்தில் பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்ட இள்ளலூர் மற்றும் செங்காடு பகுதிகளை செங்கல்பட்டு எஸ்பி விஜயகுமார் நேரில் ஆய்வு செய்து, அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரனுக்கு உத்தரவிட்டார்.

Related Stories:

More
>