காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 5 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகளுக்கு ஏற்பாடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்  இன்று மற்றும் 9ம் தேதி நடக்கிறது. இதற்காக மொத்தம் 13,63,462 வாக்குசீட்டுகளை அச்சடிக்கும் பணி காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் நடக்கிறது. ஊராட்சி மன்ற தலைவருக்கு 7,10,500, சிற்றூராட்சி வார்டு உறுப்பினருக்கு நீல நிறத்தில் 1,86,650, வெள்ளை நிற த்தில் 5,12,500 வாக்குச்சீட்டுகள் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 1281 வாக்குச்சாவடிகள் அமைத்து, 94 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது மொத்த வாக்குச்சாவடிகளில் 255 மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, 81 கேமராக்கள் மூலமாகவும், 85 வாக்குச்சாவடிகள் வெப் ஸ்டீரிமிங் மூலமாகவும், 89 வாக்குச்சாவடிகள் மைக்ரோ அப்சர்வர் மூலமாகவும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் 210 மையங்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பு எல்லையிலும். 45 வாக்குச்சாவடிகள் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்டவையாகவும் கண்டறியப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 88 வாக்குச்சாவடிகள் (குன்றத்தூர்- 82, காஞ்சிபுரம்-6) அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை (மாலை 5 மணிமுதல் 6 மணிவரை கொரோனா தொற்று உள்ளவர்கள் மட்டும்.) நடக்கும்.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் காஞ்சிபுரம், அண்ணா பல்கலைக்கழகம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் எனாத்தூர், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் திருப்புலிவனம் டாக்டர்.எம்ஜிஆர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் பென்னலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிக்கராயபுரம், ஸ்ரீ முத்துகுமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள், வாக்கு எண்ணும் நாளுக்கு முந்தைய நாள் முதல் வாக்கு எண்ணும் பணி முடிவடையும் வரை 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 மணி நேரமும் தேர்தல் சம்பந்தமான புகார்களுக்கு பதிலளிக்க உதவி எண்கள் கொடுக்கப்பட்டு, குழு அமைத்து கண்காணிப்பு பணி நடக்கிறது. அதற்கான கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-2723 7680, 044-2723 7690, 044-2723 7425 என அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories:

More
>