காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது

காஞ்சிபுரம்: மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.  இதைதொடர்ந்து, இந்தாண்டுக்கான நவராத்திரி திருவிழா நேற்று  கோயில் வளாகத்தில் உள்ள காயத்ரி மண்டபத்தில் அனுக்கை சண்டி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று காப்புக்கட்டு உற்சவம் நடைபெற்று, கோயிலில் இருந்து கோயில் வளாகத்தில் உள்ள நவராத்திரி மண்டபத்துக்கு உற்சவர் காமாட்சி அம்மன், சரஸ்வதி, லட்சுமி தேவியருடன் எழுந்தருள்கிறார். வரும் 17ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் நவராத்திரி விழா நிறைவடைகிறது.

இதை முன்னிட்டு நாளை முதல் தினசரி இரவு காமாட்சி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 13ம் தேதி காமாட்சி அம்மனுடன் துர்க்கையும் புறப்பாடாகி வன்னிமரத்தில் அம்பு எய்தி சூரசம்ஹாரம் நடக்கிறது. 15ம் தேதி கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரியும், 17ம் தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவத்தோடும் விழா நிறைவடைகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் தினமும் காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி கொலு மண்டபத்தில்  7.30 மணிமுதல் 10 மணிவரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் காஞ்சி சங்கரமடம் ஆஸ்தான வித்வான்கள், பிரபல சங்கீத கலைஞர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் சுந்தரேசன், நிர்வாக அலுவலர் தியாகராஜன் மற்றும் கோயில் ஸ்தானீகர்களும் செய்கின்றனர்.

Related Stories: