×

ஆவடி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறான விளம்பர பலகைகள் அகற்றம்: அதிகாரிகள் எச்சரிக்கை

ஆவடி:  போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட விளம்பரப்பலகைகளை அதிகாரிகள் அகற்றினர். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களை ஆக்கிரமித்து வர்த்தக நிறுவனங்களின் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், போக்குவரத்து பாதிப்பு தொடர்ந்து இருந்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் ஆவடி மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆணையாளர் சிவகுமார் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் விளம்பர பலகைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று காலை நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், ஆய்வாளர் தினகரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சி.டி.எச் சாலை, புதிய ராணுவச்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் 50க்கும் மேற்பட்ட விளம்பரப்பலகைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், `சாலை ஓரங்களில் இனிமேல் விளம்பர பலகைகள் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கக்கூடாது. ஏதேனும் விளம்பரப்பலகை வைத்திருந்தால் கலெக்டர், மாநகராட்சி நிர்வாகம் அனுமதி பெற்று அமைக்க வேண்டும். இதனை மீறி அமைத்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : Avadi Corporation , Avadi, Corporation, Transport, Billboard
× RELATED ஆவடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்: 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்