×

ஆர்.கே.பேட்டை அருகே 2 மாதமாக ரேஷன் பொருட்கள் வழங்காமல் அலைக்கழிப்பு: விற்பனையாளர் மீது மக்கள் குற்றச்சாட்டு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சி சி.ஜெ.என். கண்டிகை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள நியாயவிலை கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நியாய விலை கடை விற்பனையாளர் முறையாக கடைக்கு வந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை.

இதனால் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாரத்தில் ஓரிரு நாள் மட்டும் கடைக்கு வரும் விற்பனையாளர் ஒரு சிலருக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வாங்கிவிட்டு கைரேகை பதிவாகவில்லை, கைரேகை மெஷின் பழுதடைந்துள்ளது என பல்வேறு காரணங்கள் கூறி பொருட்கள் வழங்காமல் தொடர்ந்து காலம் தாமதப்படுத்துவதாக கிராம பெண்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. முறையாக ரேஷன் பொருட்கள் வழங்காத விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : RKpet , RK Pete, Ration Items, Wave, Vendor
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...