×

தவறான சிகிச்சையால் சிறுமி இறந்ததாக மருத்துவமனையை உறவினர்கள் சூறை: பொன்னேரியில் பரபரப்பு

பொன்னேரி: பொன்னேரி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவரது மகள் லக்ஷிதா(7). அங்குள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்தாள். கடந்த மாதம் 27ம் தேதி சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் பெற்றோர் உடனே பொன்னேரி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஒருவாரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறுமிக்கு மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உடலில் கொப்புளங்கள் உண்டானது. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் ஒரு வாரத்துக்கு முன்பு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையை நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், தவறான சிகிச்சையால்தான் சிறுமி இறந்துவிட்டதாக உறவினர்கள் கோஷம் எழுப்பினர்.

அப்போது சிலர் மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மருத்துவமனை கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. தகவலறிந்த  பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். புகாரின்படி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Treatment, little girl, hospital, relative
× RELATED இணை நோயுடன் கொரோனா தொற்றுக்கு...