×

நீலகிரியில் 4 பேரை பலிவாங்கிய ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம்: வனத்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: நீலகிரியில் 4 பேரை கொன்ற, ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் என்று வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த 51 வயதான சந்திரன் என்பவரை கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலியை வேட்டையாடி பிடிக்க தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவரும், இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பும் அவசர வழக்கு தொடர்ந்தனர்.

மனுவில், குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் எம்.டி.டி23 என்ற எண்ணிடப்பட்ட புலியை ஆட்கொல்லி புலியாக கருதி அதை சுடுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துவிட்டு, பின்னர் புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று கோரினர்.

வனத்துறை தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, புலியை கொல்லும் திட்டம் இல்லை. அதை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் கழுத்தில் ஏற்கனவே காயம் உள்ளது தெரிய வந்துள்ளது என்று
தெரிவித்தார். அரசு தரப்பின் இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், அந்த புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமல் கூட இருக்கலாம் என்பதால், அதை உடனடியாக கொல்ல முயற்சிக்க வேண்டாம். புலியின் நடவடிக்கையை கண்காணித்து, அதை பிடித்த பிறகு அதற்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது. புலியை பிடிக்கும் நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2  வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Nilgiris , Don't kill the tiger that killed 4 people in the Nilgiris: ICC instructs forest department
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...