கல்வி, தொழில் நிறுவனங்கள் எளிதில் துவங்கும் வகையில் வருவாய்த்துறை செயலாளர் தலைமையில் நிலப்பரிமாற்ற குழு: அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் சமூக பொருளாதார வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களின் தேவைக்காக தனியார் நிலங்களை வாங்கி பயன்படுத்தும்போது அந்த நிலங்களுக்கிடையே சிறு அளவிலான அரசு நிலங்களும் அமையப் பெறுகின்றன. இந்த அரசு நிலங்கள் நான்கு புறமும் தனியார் நிலங்களால்  சூழப்பட்டிருப்பதால் அவற்றை அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முடியாத  சூழல் நிலவுகிறது. எனவே தனிநபர்கள் மற்றும் கல்வி, தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் நடைமுறையை எளிமைப்படுத்த நிலப்பரிமாற்றக் குழுவை  ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டன. இக்குழு நில பரிமாற்றம் செய்வதற்கு அரசுக்கு பரிந்துரை செய்கிறது.

இது குறித்து வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜூலை 13ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆய்வுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தொழிற்சாலைகள் உயர் கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிலங்களை நில உரிமை மாற்றம் செய்வதை எளிமைப்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வருவாய்த்துறை மானியக்கோரிக்கையின் போது, அரசு மற்றும் கல்வி, தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் நிலப்பரிமாற்றம் செய்யும் பொருட்டு தற்போதை நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு நிலப்பரிமாற்றக்குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் முதன்மைச் செயலாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைக்கப்படுகிறது. இக்குழுவில் நில நிர்வாக ஆணையர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்படுகிறார். தொழில்துறை, உயர்கல்வித்துறை, நிதித்துறை ஆகிய துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். நிலப் பரிமாற்ற நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் நிலப் பரிமாற்றக் குழு ஏற்படுத்துவதே இந்த குழுவின் பணி ஆகும்.

Related Stories:

More