சென்னை ஒரகடத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

சென்னை:  இரவு பணி முடித்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த, ஒரகடம் டாஸ்மாக் கடையின் விற்பனையாளரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. கொலையை தடுக்க முயன்றவருக்கும் வெட்டு விழுந்தது. சென்னை அடுத்த ஒரகடம் அடுத்த வாரணவாசி, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் துளசிதாஸ் (42). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு  டாஸ்மாக் கடையில் விற்பனை முடிந்து, பணத்தை கடை லாக்கரில் வைத்தார்.

பின்னர்,  மற்றொரு விற்பனையாளரான கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்த ராமு (35) என்பவருடன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். கடையில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றநிலையில், அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளை எடுத்து துளசிதாசை சரமாரியாக வெட்டினர். இதை, தடுக்க முயன்ற ராமுவையும் வெட்டினர். இதில், துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், துளசிதாஸ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அதில், இரண்டு பேரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.  இந்த கொலை, கள்ளத்தொடர்பால் ஏற்பட்டதா? அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையா, கள்ளச்சாராய பிரச்னையால் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்  இரண்டு தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள இருவரையும்  தீவிரமாக தேடி வருகின்றனர்.

* 2,000 டாஸ்மாக் கடைகள் மூடல்

ஒரகடம் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் நேற்று 2 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு குழு சார்பில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னையில் 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டது.

Related Stories:

More
>