×

அதிமுக முன்னாள் பெண் அமைச்சரின் மோசடிக்கு உடந்தை? துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. தற்கொலை: கேளம்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் பரபரப்பு; மர்மம் குறித்து போலீஸ் ஆய்வு

சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள போலீஸ் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில்,  எஸ்.ஐ ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சரின் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் விசாரித்த நிலையில், எஸ்.ஐ., தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சேர்ந்தவர் கவுதமன் (59). கேளம்பாக்கம் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள போலீஸ் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார்.

இவர், சென்னை மாநகர காவல்துறையில் பாதுகாப்பு பிரிவில் சிறப்பு எஸ்.ஐ. ஆக ,இருந்தார்.  இந்த பிரிவில் உள்ளவர்கள் நீதிபதிகள், உயர் அதிகாரிகள், அரசு விருந்தினர்கள் போன்றவர்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இந்நிலையில், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அனில்குமார் உபாத்யாயா,  சென்னை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரின்  பாதுகாப்பு பணியில் கடந்த சில நாட்களாக கவுதமன் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது  மனைவி பெயர் லதா (55). இவர்களது மகன்கள் சாய் முகிலன் (27), தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  

சாய் சித்தார்த்தன் (16), வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மகன்கள் இருவரும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நோய்க்கு நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக கவுதமன் தனது வருவாயைத் தாண்டி பலரிடமும் கடன் பெற்று செலவு செய்து வந்தார். தொடர் வேலை மற்றும் பணிச்சுமை காரணமாக மகன்களின் சிகிச்சையை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால், வேலையை விட்டு விட முடிவு செய்து மனைவி மற்றும் மகன்களிடம் பேசினார்.

ஆனால், இன்னும் ஒரு வருடம்தான் உள்ளதால் விருப்ப ஓய்வு கொடுக்க வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் கவுதமன் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய அவர் தான் கையோடு எடுத்து வந்த கை துப்பாக்கியால் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அவரது மனைவி லதா மற்றும் மகன்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, தலையில் குண்டு காயமடைந்து கவுதமன் இறந்து கிடந்தார். மேலும், அருகில் இருந்த குடியிருப்புவாசிகளும் ஓடி வந்து பார்த்தனர். உடனடியாக தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுதமனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே போலீஸ் எஸ்.ஐ. தற்கொலை செய்துகொண்ட வீட்டில் செங்கல்பட்டு எஸ்.பி. விஜயகுமார், மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த அதிமுக ஆட்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். அப்போது தொழிலாளர் நலத்துறை மற்றும் வக்பு வாரியத்தில் பலருக்கு வேலைவாங்கி தருவதாக கூறி ₹6 கோடி பணம் வசூலித்ததாக தெரிகிறது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் வேலை கேட்டு பணம் கொடுத்தவர்கள் நிலோபர் கபிலுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால், தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும்அரசியல் உதவியாளராக இருந்த பிரகாசம் என்பவர் தான் தன் பெயரை பயன்படுத்தி பணம் வசூல் செய்துள்ளார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அவரது அரசியல் உதவியாளராக இருந்த பிரகாசம் டிஜிபியை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் நிலோபர் கபில் கூறியதின் பேரில்தான் சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் வாங்கியதாகவும் பணத்தை வாங்கியதுமே அவரது வங்கி கணக்கில் போட்டு விட்டதாகவும் கூறினார். இந்த விவகாரங்கள் அனைத்தும் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எஸ்.ஐ கவுதமனுக்குதான் தெரியும் என்று அந்த புகாரில்  பிரகாசம் கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் கவுதமனிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தரப்பில் இருந்து கவுதமனுக்கு மிரட்டல் வந்ததாகவும், முன்னாள் அமைச்சரை காட்டிக் கொடுத்தால் நடப்பதே வேறு என்று கூறி அந்த பணத்தை வாங்கியதே கவுதமன்தான் என்றும் தனக்கு எதுவும் தெரியாது எனவும் அமைச்சர் வாக்குமூலம் அளித்தால் வாழ்நாள் முழுவதும் சிறைதான் என்றும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், தனக்கு சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால், விசாரணை இருப்பதால் விருப்ப ஓய்வு அனுமதி கிடைக்காது என்று சக நண்பர்கள் கூறியுள்ளனர். இதனால், விசாரணைக்கு பயந்துதான் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : AIADMK ,Kalambakkam ,station , AIADMK complicit in former woman minister's scam? SI shot by gunman. Suicide: Riot at Kalambakam police station; Police investigation into the mystery
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...