தமிழகம், கேரளாவில் கைவரிசை: ரயில் கொள்ளை கும்பல் அதிரடி கைது

திருவனந்தபுரம்: தமிழகம், கேரளாவில் கைவரிசை காட்டிய ரயில் கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோவையை சேர்ந்தவர் கவுசல்யா (23). டெல்லியில்  வசிக்கும் கேரளாவில் உள்ள திருவல்லாவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (45). அவரது மகள்  அஞ்சலி (23). அவர்கள் 3 ேபரும் கடந்த மாதம் 11ம் தேதி டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ரயிலில் பயணம் செய்தனர். ஜெயலட்சுமியும், அஞ்சலியும் ஆக்ராவில் இருந்து திருவல்லாவுக்கு வந்தனர். கவுசல்யா கோவையில் இருந்து ஆலுவாவுக்கு  டிக்கெட் எடுத்திருந்தார்.

திருச்சூரில் 3 பேரும் சாப்பாடு வாங்கி  சாப்பிட்டுவிட்டு தூங்கினர். அவர்கள் திருவனந்தபுரம் வந்த பிறகும்  ரயிலில் இருந்து இறங்கவில்லை. யார்டு செல்வதற்கு முன்பு ரயில்வே போலீசார் வழக்கமான பரிசோதனையில்  ஈடுபட்டனர். அப்போது 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டுபிடித்தனர். உடனே அவர்களை மீட்டு  திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மயக்கம்  தெளிந்த பிறகு விசாரித்தனர்.

அப்போது அவர்களிடம் இருந்த பொருட்கள் திருட்டுபோனது  தெரியவந்தது. ஜெயலட்சுமி, அஞ்சலி ஆகியோரிடம் இருந்து 17 பவுன்  நகைகள், ரூ.16 ஆயிரம் பணம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களும்,  கவுசல்யாவிடம் இருந்து ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள செல்போனும் திருடப்பட்டது  தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், அவர்களது பெட்டியில் பயணம்  செய்த கும்பல் சாப்பாட்டில் தூக்க மருந்தை கலந்து திருடியது  தெரியவந்தது.

இது தொடர்பாக திருவனந்தபுரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையடித்தது கொல்கத்தாவை சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் கொல்கத்தா சென்று விசாரணை  நடத்தினர். இதில், 3 பேர் கொள்ளையர்கள் என்பதும், அவர்கள் மீண்டும் கொள்ளையடிப்பதற்காக ஆக்ராவில் இருந்து  எர்ணாகுளம் ெசல்லும் ரயிலில் பயணம் செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து  ரயில்வே போலீசார் ரயிலில் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது 3 பேரையும்  மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் கொல்கத்தாவை சேர்ந்த சவுகத் அலி (49),  கய்யும் (49), சுபைர்காத்சி (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் திருவனந்தபுரம் அழைத்து வந்தனர்.

அதைத் தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில், 3 பேரும் சேர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு இடங்களில் இதேபோல் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு உணவு அல்லது குடிநீரில் தூக்க மாத்திரை பொடியை  கலந்துகொடுத்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: