×

மணிக்கட்டு காயத்துக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை: டொமினிக் தீம் மகிழ்ச்சி

வியன்னா: ’’வலது கை மணிக்கட்டு காயத்துக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்று டாக்டர்கள் கூறி விட்டனர். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மீண்டும் டென்னிஸ் ஆடுவதற்கு விரைவில் பயிற்சிகளை துவக்க உள்ளேன்’’ என்று ஆஸ்திரியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் டொமினிக் தீம் தெரிவித்துள்ளார். கடந்த 2020ல் யு.எஸ்.ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்ற டொமினிக் தீம், அதே ஆண்டில் ஆஸ்திரரேலிய ஓபனில் ரன்னர் பட்டம் வென்றுள்ளார். தவிர பிரெஞ்ச் ஓபனிலும் 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ரன்னர் கோப்பையை கைப்பற்றியுள்ளார். இந்த வெற்றிகளின் மூலம் ஏடிபி தரவரிசையில் 3ம் இடத்திற்கு முன்னேறிய டொமினிக் தீம், கடந்த ஜூலையில் வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக, டென்னிசில் இருந்து தற்காலிகமாக விலகினார். தொடர்ந்து இந்த ஆண்டு ஜூலைக்கு பின்னரான போட்டிகளில் எதிலும் அவர் பங்கேற்கவில்லை என்பதால், தற்போது ஏடிபி தரவரிசையில் அவர் 8ம் இடத்தில் உள்ளார்.

வரும் 7ம் தேதி இண்டியன்வெல்சில் பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி துவங்கவுள்ள நிலையில் அதிலும் டொமினிக் தீம் பங்கேற்கவில்லை. இந்நிலையில் வியன்னாவில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘‘இன்று (நேற்று) நான் முக்கியமான செய்தி ஒன்று வைத்துள்ளேன். எனது மணிக்கட்டு காயத்திற்கு சிகிச்சை பெற நான் கடந்த வாரம் பெல்ஜியத்திற்கு சென்றேன். அங்கு நான் எடுத்துக் கொண்ட பரிசோதனைகளின் முடிவுகள் தற்போது வந்துள்ளன. அதன் அடிப்படையில் எனக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் நான் முழுமையாக குணமடைந்து விடுவேன் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

டென்னிஸ் ராக்கெட்டை தொடாததால் எதையே பறி கொடுத்தது போல உணர்கிறேன். இன்றும் 2 வாரங்களில் என்னுடைய மணிக்கட்டு சகஜமான நிலைக்கு வந்து விடும். அதன் பின்னர் நான் படிப்படியாக டென்னிஸ் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளேன். அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Dominic thiem
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1