காஞ்சிபுரம், வேலூரில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடை உட்பட 9 இடங்களில் வருமான வரி துறை திடீர் சோதனை

சென்னை: காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடைகள் உட்பட 9 இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரபல ஜவுளி கடைகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதாகவும், வியாபாரத்தில் ஈட்டிய பணத்ைத முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை 8 மணிக்கு காஞ்சிபுரத்துக்கு விரைந்தனர். அங்கு, காந்தி ரோடு மற்றும் டி.கே.நம்பி தெருவில் இயங்கி வரும் பிரபல தனியார் ஜவுளி நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடையில் பணிபுரியும் சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை வெளியே அனுப்பி விட்டு ஷோரூம் காசாளர், பில்லிங் செக்‌ஷன்கள், குடோன் உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

இதே போன்று காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே ஒரு தனியார் நிதி நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடந்தது. மேலும் ஜவுளி கடை மற்றும் நிதி நிறுவன உரிமையாளர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது. மொத்தம் 8 இடங்களில் மொத்தம் 54 அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் நடந்த சோதனையால் மற்ற நிறுவன உரிமையாளர்களும் பீதியடைந்தனர். அங்கும் சோதனை நடக்கக் கூடும் என்பதால் பரபரப்பு நிலவியது.

வேலூர்: வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள தனியார் சில்க்ஸ் நிறுவனத்திற்கு இன்று காலை 9 மணியளவில் சென்ற வருமான வரித்துறையினர், கடையில் இருந்து யாரையும் வெளியேற அனுமதிக்கவில்லை. காரில் குழுவாக வந்து இறங்கிய வருமான வரித்துறையினர், ஷோரூம் காசாளர், பில்லிங் செக்‌ஷன்கள், சரக்கு இருப்பு வைக்கும் கிடங்கு உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது கடையின் அனைத்து விற்பனை, கொள்முதல், இருப்பு பதிவேடுகள், ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டனர். அதோடு கடையின் சரக்கு இருப்பையும் தங்கள் ஆய்வின்போது கருத்தில் கொண்டனர். தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையின் இந்த ரெய்டு காரணமாக வேலூர் காட்பாடி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

More
>