×

போலீஸ் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா போராட்டம்

தண்டையார்பேட்டை: போலீஸ் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் சென்னை கலெக்டர் அலுவலகம் எதிரே தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (27). இவர், கடந்த 2017ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேருவதற்காக சென்னையில் எழுத்து தேர்வு எழுதியுள்ளார். அப்போது, சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தை சேர்ந்த வீரமணி (29) என்பவரும் போலீஸ் வேலைக்கான தேர்வு எழுதியுள்ளார். இதில், வீரமணிக்கு காவல்துறையில் வேலை கிடைத்துள்ளது. ஆனால் சரஸ்வதிக்கு வேலை கிடைக்கவில்லை. தற்போது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக வீரமணி பணியாற்றி வருகிறார்.

எழுத்து தேர்வு எழுத வந்தபோது சரஸ்வதிக்கும், வீரமணிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் வீரமணியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல போராட்டங்களுக்கு பின் வீரமணியும், சரஸ்வதியும் திருவேற்காடு கோயிலில் கடந்த மார்ச் 11ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவரும் வீரமணி வீட்டில் வசித்து வந்தனர். திருமணம் நடந்த நாளில் இருந்து தம்பதியை சேரவிடாமல் வீரமணியின் பெற்றோர் பிரித்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பெற்றோர் வீட்டில் 25 பவுன் நகை வாங்கி வரும்படி வீரமணியின் பெற்றோர் சரஸ்வதியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். நகை வாங்கி வராததால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரஸ்வதியை வீட்டைவிட்டு துரத்தியுள்ளனர். இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சரஸ்வதி புகார் செய்தார். புகார் மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவிடம் புகார் அளித்தார். மனுவை பெற்ற அவர், இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் சரஸ்வதி நேற்று சென்னை கலெக்டர் அலுவலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

வடக்கு கடற்கரை போலீசார், சரஸ்வதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சரஸ்வதி கலெக்டரிடம் மனு அளித்தார். அதில், “போலீஸ் வேலையில் சேர எழுத்து தேர்வு எழுத சென்னைக்கு வந்தபோது எனக்கும், தற்போது போலீஸ்காரராக இருக்கும் வீரமணிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தோம்.

பல போராட்டங்களுக்கு பின் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடிந்த நாளில் இருந்து என்னை கொடுமைப்படுத்துகின்றனர். நான் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் என்னை விரட்டிவிட்டு வீரமணிக்கு வேறு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு வீரமணியும் உடந்தையாக உள்ளார். வரதட்சணை வாங்கி வரும்படி மாமனார், மாமியார் கொடுமைப்படுத்துகின்றனர். வீரமணி போலீசார் என்பதால் போலீசாரும் அவருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, வீரமணியை என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Tags : Dharna , Woman, Tarna, struggle
× RELATED இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம்