டாஸ்மாக் விற்பனையாளர் வெட்டி கொலை; தடுத்தவருக்கும் வெட்டு

ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் டாஸ்மாக் விற்பனையானர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். தடுத்த மற்றொரு விற்பனையாளருக்கும் வெட்டு விழுந்தது. பைக்கில் வந்த 2 பேர் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த வாரணவாசி, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் துளசிதாஸ் (42). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார்.

நேற்று டாஸ்மாக் கடை வியாபாரம் முடிந்ததும், பணத்தை கடையின் உள்ள லாக்கரில் வைத்து பூட்டினார். இவருடன் மற்றொரு விற்பனையாளர் கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்த ராமு (35) என்பவருடன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். சிறிது தூரம் நடந்து சென்றதும், அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர், கத்தி மற்றும் அரிவாளுடன் வந்து துளசிதாசை சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற ராமுவையும் சரமாரியாக வெட்டினர். இதில் துளசிதாஸ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து, உயிருக்கு போராடிய ராமுவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வந்த ஒரகடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துளசிதாஸ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர். விற்பனையாளர் கொலையை கண்டித்து காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல இடங்களில் 4 ஆயிரம் மது கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

More
>