நீலகிரியில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலி மீண்டும் தப்பியது!: தொடர் தோல்வியால் திணறும் வனத்துறையினர்..!!

நீலகிரி: நீலகிரியில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலி மீண்டும் தப்பியது. கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் மற்றும் மசினகுடி பகுதியில் 4 பேரை அடித்து கொன்ற ஆட்கொல்லி புலியை பிடிப்பதற்கான பணியில் 11வது நாளாக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். T - 23 என்று பெயரிடப்பட்ட இந்த புலி சமீப காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததுடன் பொதுமக்களின் உயிர்களையும் பறித்து வருகிறது. இந்த புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று மசினகுடி பகுதி வாசிகள் பல்வேறு போராட்டத்தை நடத்தியதை அடுத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 நாட்களாக பணியில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், நேற்று ஆட்கொல்லி புலியானது முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் தென்பட்டது. புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்ற போது அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்ததன் காரணமாக புலியை பிடிப்பதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில் சிங்காரா வனப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் புலியின் கால்தடத்தை பின் தொடர்ந்து சென்றனர். இதையடுத்து புலியை சுற்றிவளைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முற்பட்ட போது அது அங்கிருந்து தப்பி அடுத்த வனப்பகுதியை நோக்கி நகர்ந்தது.

புலி தற்போது செல்லும் இடம் அதிக மூங்கில் இருக்கும் பகுதியாக உள்ளதால் புலியை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். 4 இடங்களில் மரத்தின் மீது பரண் அமைத்து புலியை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. புலிக்கு பிடித்த உணவாக கருதக்கூடிய புள்ளி மான்கள் மற்றும் கடா மான்களின் ஓசையை எழுப்பி புலியை பிடிக்கவும் திட்டமிட்டிருக்கின்றனர். இதன் மூலம் புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளனர்.

Related Stories:

More
>