×

கச்சிராயபாளையம் அருகே பரபரப்பு குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்

சின்னசேலம் : வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கராயபாளையம் 10வது வார்டு  பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதி  மக்களுக்கு கோமுகி ஆற்றை ஒட்டி உள்ள பேரூராட்சி கிணற்றின்மூலம் குடிநீர்  வழங்கி வருகின்றனர். இது அந்த பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால்  கடந்த ஒரு ஆண்டில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து 3 முறை சாலைமறியல்  செய்துள்ளனர்.

மேலும் வடக்கநந்தல் பேரூராட்சி நிர்வாகத்திடம்  முறையிட்டுள்ளனர். ஆனால் போதுமான குடிநீர் வழங்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.  இதனால் ஆத்திரமடைந்த 10வது  வார்டுக்கு உட்பட்ட வடக்கு தெரு, சனிமூலைத்தெரு, மாரியம்மன் கோயில் தெருவை  சேர்ந்த மக்கள் காலிகுடங்களுடன் நேற்று காலை  மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம்  மெயின்ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் 100க்கும்  மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அணிவகுத்து நின்றதால்,  போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பள்ளி, கல்லூரி மாணவர்களும்,  பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தகவலறிந்த கச்சிராயபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, வடக்கநந்தல்  பேரூராட்சி மேஸ்திரி ராஜா ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி  அளித்தால்தான் கலைந்து செல்வோம் எனக்கூறி பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையால் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து  சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடி நடவடிக்கை

வடக்கநந்தல்  பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கராயபாளையம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை  இருப்பதை அறிந்த உதயசூரியன் எம்எல்ஏ பேரூராட்சி அதிகாரிகளை அழைத்து உடனடி  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர்  ஆறுமுகம், மேஸ்திரி ராஜா, குடிநீர் திட்ட பணியாளர்கள் ராமச்சந்திரன்,  லட்சுமணன் உள்ளிட்டோர் அக்கராயபாளையம் பகுதிக்கு சென்று 10 வார்டு தெரு  முழுவதையும் அளவீடு செய்தனர். பின்னர் வார்டு முழுவதும் தரைதளத்தில் ரூ.4லட்சம் மதிப்பில் இரும்பு பைப்லைன் வைத்து அதில் குடிநீர் இணைப்பு வழங்க  அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளிலேயே அந்த பணியை  துவங்கி முடிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம்

அக்கராயபாளையம்  10வது வார்டு மக்கள் நலன்கருதி கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு  பூமிக்கடியில் ஆழமாக பைப்லைன் புதைத்து குடிநீர் வழங்கி வருகின்றனர்.  மேலும் இந்த பகுதியில் போதுமான அளவில் குடிநீர் எடுத்து விடுவதுமில்லை.  இதனால்  அங்குள்ள குழாய்களில் மிகவும் குறைவாகவே  குடிநீர் வருகிறது. இது அந்த பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனாலேயே  குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.

Tags : Kachirayapalayam , Chinnasalem: More than 1000 people live in the 10th ward area of Akkarayapalayam under Vadakkanandal municipality. This part
× RELATED கச்சிராயபாளையம் அருகே நள்ளிரவு கூரை...