திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு குறைதீர்வு கூட்டம்-கோரிக்கை மனுக்களுடன் குவிந்த பொதுமக்கள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு பிறகு நடந்த குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனுக்களுடன் பொதுமக்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே, பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், கலெக்டர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் நேற்று முதல் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. அதில், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், டிஆர்ஓ முத்துகுமாரசாமி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, கோரிக்கை மனுக்களுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். எனவே, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முகக்கவசம் அணிந்திருந்தவர்கள் மட்டும் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், நுழைவு வாயிலில் கிருமி நாசினி மூலம் கைகள் தூய்மை செய்யப்பட்டன.

கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட கூட்ட அரங்கில், ஒவ்வொரு நபராக சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், கூட்ட அரங்குக்கு வெளியே பொதுமக்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. மேலும், வரிசையில் இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ேகாரிக்கைகளை வலியுறுத்தியும், சுய தொழில் வேலைவாய்ப்பு, கடனுதவி போன்ற கோரிக்கை மனுக்களும் அதிக அளவில் குவிந்தன.

வந்தவாசி தாலுகா, வடுவன்குடிசை கிராமத்தில், எஸ்டி பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட ஒதுக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும் என அந்த கிராமத்தினர் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, மனுக்களை அளித்த உடல்நிலை நலிவடைந்த முதியவர்களுக்கு, 14 மளிகைகள் அடங்கிய கொரோனா கால நிவாரண பொருட்களை கலெக்டர் பா.முருகேஷ் வழங்கினார்.

மேலும், முதியோர் உதவித்தொகைக்கு தகுதியுள்ள மூன்று நபர்களுக்கு அதற்கான உத்தரவுகளையும் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ₹22 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கடந்த 18 மாதங்களுக்கு பிறகு, குறைதீர்வு கூட்டத்தில் நேரடியாக கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டதால், பல மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் ஆர்வமுடன் 645 மனுக்களை அளித்து சென்றனர்.

மண்ணெண்ணை பாட்டிலுடன் வந்த டேங்க் ஆபரேட்டரால் பரபரப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில், திடீரென தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, போலீசார் கடும் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்த டேங்க் அபரேட்டர் சசிகுமார்(40) என்பவர், ேகாரிக்கை மனுக்கள் பெறும் கூட்ட அரங்குக்கு வெளியே திடீரென பையில் மறைத்து பிளாஸ்டிக் பாட்டிலில் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொள்ள வெளியே எடுத்தார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய தந்தை ஓய்வு பெற்ற பிறகு, கடந்த ஒரு ஆண்டாக டேங்க் ஆபரேட்டராக பணிபுரிவதாகவும், அதற்கான ஊதியத்தை வழங்காமல் அலைகழிப்பதால் கலெக்டரின் கவனத்தை ஈர்க்க தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அவரது கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இடைத் தேர்தல் நடைபெறும் பகுதி கோரிக்கை மனுக்கள் பெட்டியில் சேர்ந்தது

திருவண்ணாமலை மாவட்டத்தில், 66 ஊரக பகுதிகளில் உள்ளாட்சி இடைத் தேர்தல் நடக்கிறது. எனவே, இடைத் தேர்தல் நடைபெறும் சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களின் கோரிக்கை மனுக்களை, குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் பெறவில்லை. அதையொட்டி, மனுக்களை கணினியில் பதிவு செய்யும்போதே, தேர்தல் கட்டுப்பாடு உள்ள கிராமங்களில் இருந்து வந்தவர்களின் மனுக்களை தனியாக பிரித்து, கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த பெட்டியில் செலுத்துமாறு அறிவுறுத்தினர்.

அதன்படி, பெட்டியில் செலுத்தப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும், தேர்தல் நடத்தை விதிமுறை கட்டுப்பாடு முடிந்ததும், முறையாக பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More
>