செந்துறை அருகே நடந்த மாநில கபடி போட்டியில் காவல்துறை பெண்கள் அணி சாதனை-முதல் பரிசை பெற்றது

செந்துறை : செந்துறை அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசினை சென்னையும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல்துறை அணியும் தட்டி சென்றன.அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள குமிழியம் கிராமத்தில் தியாகி திலீபன் நற்பணி மன்றம் மற்றும் கபாடி குழு இணைந்து நடத்தும் 45ம் ஆண்டு மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. இப்போட்டி அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கிய இப்போட்டியில் சென்னை சிட்டி போலீஸ், திருச்சி, சேலம், மதுரை, திருப்பூர், கடலூர், தமிழ்நாடு காவல்துறை உட்பட ஆண்கள் பிரிவில் 104 அணிகளும், பெண் பிரிவில் 58 அணிகள் என மொத்தம் 162 அணிகள் தமிழகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்டன.

இரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்று நேற்று காலை இறுதி போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை அணியும் வேலூர் சாவடி அணியும் மோதியதில் சென்னை அணி வெற்றி பெற்று முதல் பரிசு மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை தட்டிச்சென்றது. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு போலீஸ் அணியும் குமிழியம் அணியும் மோதியதில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி பெற்று முதல் பரிசு மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை பெற்றது. ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற சாவடி அணி பரிசு மற்றும் ரூ.30ஆயிரம் ரொக்கமும், மூன்றாம் இடம் பெற்ற குமிழியம் அணி பரிசு மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கமும், நான்காவது இடத்தில் மாங்குடி அணி பரிசு மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கமும் பெற்றது.

பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம்பெற்ற குமிழியம் தியாகி திலீபன் அணி பரிசு ரூ.20 ஆயிரம் ரொக்கமும், மூன்றாம் இடம் பெற்ற திருப்பூர் அணி பரிசு மற்றும் ரூ.15 ஆயிரமும், நான்காம் பரிசு பெற்ற சென்னை சிட்டி போலீஸ் அணி பரிசு ரூ.10 ஆயிரம் ரொக்கத்தினை வென்றது. வெற்றிபெற்ற நபர்களுக்கு ஊராட்சிமன்ற தலைவர் பழனிவேல், ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன், முக்கியஸ்தர்கள் பரிசுகளையும், ரொக்கத்தினையும் வழங்கினர்.

Related Stories:

More