தமிழக அரசின் எதிர்ப்பை சட்ட ரீதியாக எதிர்கொண்டு 100% மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவோம் : கர்நாடக முதல்வர் உறுதி!!

பெங்களூரு : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் விரைவில் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள மேகதாது என்ற இடத்தில் 9000 கோடி ரூபாய் மதிப்பில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முடிவெடுத்து இருந்தது. இது தொடர்பாக அந்த இடத்தில் ஆய்வு செய்து ஒன்றிய அரசிடம் விரிவான திட்ட அறிக்கையை அளித்துள்ளது. இந்த திட்டத்தினால் தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரில் சிக்கல் ஏற்படுவதுடன் உபரி நீர் கிடைக்காமல் போகும் என்பதால் தமிழ்நாடு அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் மேகதாதுவில் திட்டமிட்டபடி அணை கட்டுவது உறுதி என்றும் அரசின் இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். தமிழக அரசின் எதிர்ப்பை சட்ட ரீதியாக எதிர்கொண்டு 100% மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கர்நாடக முதல்வர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது, மேகதாது அணை கட்டுவது அதில் இருந்து நீர் பெறுவது தமிழ்நாட்டின் கையில் இல்லை.அதனால் அவர்கள் எது பேசினாலும் அதற்கு அர்த்தம் இல்லை.நம்முடைய நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது, முயற்சியிலும் மாற்றம் கிடையாது. சட்டப்போராட்டத்திலும் மாற்றம் கிடையாது. மேகதாது அணை கட்டுவது உறுதி, என்றார்.  

இதே போல மேகதாது திட்ட பணிகளை 1 மாதத்தில் தொடங்க வேண்டும் என்றும் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் கெடு விதித்துளளார். இல்லாவிட்டால் கர்நாடக பாஜக அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசும் எதிர்க்கட்சியான காங்கிரசும் மேகதாது அணை விவகாரத்தில் உறுதியாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories:

More
>