காங்.கின் உண்மையான தொண்டர் பிரியங்கா...பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு எல்லாம் அஞ்சமாட்டார்!: ராகுல்காந்தி பெருமிதம்..!!

டெல்லி: உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக அரசின் அடக்கு முறைக்கு தனது சகோதரி அஞ்சமாட்டார் என்றும் அவர் காங்கிரசின் உண்மையான தொண்டர் என்றும் ராகுல்காந்தி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இந்த வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். கலவரத்தை தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு சித்தாபூர் என்ற இடத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை காண சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காவலர்களுடன் வாதிட்ட துணிச்சலை கண்டு அவர்கள் அதிர்ந்து போனதாக கூறியுள்ளார். பாஜக அரசின் அடக்கு முறைக்கு தனது சகோதரி பிரியங்கா அஞ்சமாட்டார் என்றும் அவர் காங்கிரசின் உண்மையான தொண்டர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிரியங்கா காந்தியின் அகிம்சை வழி போராட்டம் வெற்றிபெறும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>