×

நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் : வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

சென்னை : நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம் என்று வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் MDT23 எனப் பெயரிடப்பட்ட புலி ஒன்று மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்களை அந்த புலி கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதையொட்டி அப்பகுதி மக்கள் தாங்கள் அச்சத்துடன் நாட்களைக் கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.எனவே ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க தமிழக தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார்.

புலியை சுட்டுப் பிடிக்கும் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடர்பட்டது. அதில் இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் பேனர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த புலியை கொல்வதற்காக சுட்டுப்பிடிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அதை உயிருடன் பிடிப்பதே நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி, நீலகிரியில் உலவும் புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம், என்றும் எனவே புலியை கொல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும் புலியை பிடிக்கும் பணியின் போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்றும் புலியின் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து அதை பிடித்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த புலியை பிடித்து சிகிச்சை அளித்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் ஒத்திவைத்தனர்.


Tags : Nilgiris ,Chennai High Court , நீலகிரி,ஆட்கொல்லி, புலி
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...