×

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 410 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை-கலெக்டர் தகவல்

தஞ்சை : தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 410 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பேசியதாவது, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் மனு பெட்டிகள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு தொடர்புடைய துறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வந்தன.

தற்போது தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க இன்று (நேற்று) முதல் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா.
முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுககு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்து வண்டிக்கார தெருவை சேர்ந்த சண்முகபிரியா என்பவர் கல்லூரியிலிருந்து சான்றிதழ் பெற ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.7,650 வீதம் ரூ.22,950 செலவில் மூன்று சக்கர சைக்கிள் 3 பேருக்கும், சவுதி அரேபியா நாட்டில் பணியில் இருந்தபோது இறந்த கும்பகோணம் மேலக்காவேரி கிராமம் வடக்கு குடியானத் தெருவைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவருக்கு சேர வேண்டிய சட்டப்படியான நிலுவைத் தொகை ரூ.363250க்கான காசோலை அவரது தாயார் அலிமாபீவி முகமது சுல்தான் என்பவருக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.கூட்டத்தில் வருவாய்த்துறை கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) காந்த், உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Thanjai Collector Office , Tanjore: Immediate action will be taken on 410 petitions received at the grievance meeting held at the Tanjore Collector's Office
× RELATED சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து