ஆரம்ப நிலையில், முற்றிய நிலையில் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு விரைவில் அதிநவீன இயந்திரங்கள்-திருச்சி ஜிஹெச் டீன் தகவல்

திருச்சி : மார்பக புற்றுநோய்க்கு ஆரம்ப நிலையில், முற்றிய நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க விரைவில் அதிநவீன இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளது என மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.உடல்பருமன், 30 வயதுக்கு மேல் திருமணம் செய்தல், தாய்ப்பால் வழங்காமல் தவிர்த்தல், குழந்தை பேறு தள்ளி போடுதல் போன்ற காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மருத்துவமனை முதல்வர் வனிதா தலைமை வகித்தார். இதில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சமூக இடைவெளியுடன் பிங்க் நிற பலூனை காற்றில் பறக்கவிட்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த கையேடுகளையும் வழங்கினர். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா நிருபர்களிடம் கூறுகையில், மார்பக புற்றுநோய் குறித்து சுயபரிசோதனை செய்து ஆரம்ப காலத்திலேயே மருத்துவமனைக்கு வந்தால் முழுமையாக விடுபடலாம். பெண்களுக்கு அதிகமாக புற்றுநோய் வருவதை தடுக்க உடல் பருமனை குறைக்க வேண்டும், உடற்பயிற்சியும் தாய்ப்பால் கொடுப்பதும் அவசியம். மேலும் லிப்டில் பயணிக்காமல் படிக்கட்டில் நடக்க வேண்டும் என்று கூறினார்.

அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை கண்டறிந்து, ஆரம்ப காலத்திலேயே குணப்படுத்திட மாமோகிராம் கருவி 2 மாதத்திற்குள் நிறுவப்படவுள்ளது. மேலும் அட்வான்ஸ்ட் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க லீனார்க் ரேடியோகிராபி மிஷினும் 3 மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளது. ஆரம்ப காலத்திலேயே இதனை கண்டறிந்து சிகிச்சை அளித்து நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், உயிர்பலியை தவிர்க்கவும் சுயபரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories:

More