7 மாதத்திற்கு பிறகு குறைதீர் கூட்டம் திருச்சி கலெக்டர் ஆபீசில் மனு அளிக்க குவிந்த மக்கள்-கொரோனா பரிசோதனைக்கு பின் அனுமதி

திருச்சி : திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கொரோனா பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து கலெக்டர் சிவராசு கோரிக்கை மனுக்களை பெற்றார்.தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தில் கலெக்டர்களிடம் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா முதல் அலை பரவி வந்ததால் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் குறைதீர் கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் மனுக்களை போட பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை அளித்து வந்தனர். கொரோனா முதல் அலை பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேரடியாக நடந்தது. அதன் பிறகு ஒருமாதம் குறைதீர் கூட்டம் நடந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் விதிமுறை மற்றும் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக மீண்டும் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலையை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டார். மேலும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தினர். முதல்வர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் அந்தந்த கலெக்டர்கள் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் செப்.4ம் தேதி முதல் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி 7 மாதங்களுக்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று காலை நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமையில், டிஆர்ஓ., பழனிகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்தனர். குறைதீர் கூட்டரங்கில் காலை முதலே ஏராளமான மக்கள் குவிந்தனர். நுழைவாயிலில் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே மக்கள் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு மாஸ்க் வழங்கப்பட்டது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories:

More
>