உ.பி.யில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..!!

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற விவகாரம் தொடர்பாக வெளியாகி இருக்கும் காணொளி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி அருகே ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பாஜக தலைவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது அவர்களுக்கு விவசாயிகள் கறுப்பு கொடி காட்டினர். அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென்று விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது.

விவசாயிகள் மீது வாகனம் மோதும் பரபரப்பான காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் மோதியதில் விவசாயிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிறகு வன்முறையாக மாறியது. இதில் 5 பேர் கொல்லப்பட்டதால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் விவசாயிகள் மீது காரை மோதியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவம் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் உத்திரபிரதேச அரசு, கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 45 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என்று கூறியுள்ளது. லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவத்தை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. 

Related Stories:

More
>