×

6 மணி நேரம் முடங்கிய பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் : மன்னிப்பு கோரினார் மார்க் ஜுக்கர்பெர்க்!!

சென்னை : உலகெங்கும் பல நாடுகளில் பேஸ்புக் மற்றும் அதன் இரு துணை தளங்களான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் 6 மணி நேரம் முடங்கியதால் பயனாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்தியாவிலும் நேற்று இரவு 9 மணி அளவில் இருந்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய பக்கங்கள் செயல்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இதற்காக பயனாளர்களிடம் மன்னிப்பு கோரியதுடன் பிரச்சனையை விரைவில் சரி செய்வோம் என்றும் தகவல் பதிவிடப்பட்டது.

இந்த நிலையில் அதிகாலை 4 மணி அளவில் முடக்கப்பட்ட சேவைகள் மெல்ல மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே சமூக வலைத்தளம் முடக்கத்திற்கு வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை பயனாளிகளிடம் மன்னிப்பு கோரியது. இது பற்றி தமது பேஸ்புக் வலைத்தள பக்கத்தில் மன்னிப்பு கோரிய அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் மெசஞ்சர் ஆகியவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இடையூருக்கு மன்னிக்கவும், நீங்கள் அக்கறை கொண்டவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு, எங்கள் சேவைகளை நீங்கள் எவ்வளவு நம்பி இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளார். இதே போல் இன்ஸ்டாகிராம் தனது பக்கத்தில், இன்ஸ்டாகிராம் செயலி மெல்ல செயல்பட தொடங்கி உள்ளது, அதே வேளையில் முழுமையான செயல் திறனுடன் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொறுமை காத்த பயனாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பு கோருவதாகவும் பதிவிடப்பட்டுள்ளது.இதே போல வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாத நிலை உருவானதற்கு  அனைவரிடமும் மன்னிப்பு கோருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்  என உலகம் முழுவதும் அதிக பயனாளர்களை கொண்ட சமூக வலைதளம் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேல் இயங்காமல் இருந்தது இதுவே முதன்முறையாகும். சமூக வலைத்தளங்களின் சேவை முடங்கியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.


Tags : Facebook ,WhatsApp ,Instagram ,Mark Zuckerberg , பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்
× RELATED இணையத்தில் மலர்ந்த காதல் 34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது முதியவர்