பிளே ஆப் சுற்றுக்கு மல்லுக்கட்டு: மும்பை-ராஜஸ்தான் இன்று முக்கிய மோதல்

ஷார்ஜா: ஐபிஎல் லீக்கின், இன்றைய மிக முக்கிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் - 2021ஐ பொறுத்தவரை சென்னை, டெல்லி, பெங்களூர் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. தற்போதைய நிலவரப்படி 3 அணிகளும் முதல் 3 இடங்களில் உள்ளன. வரும் போட்டிகளில் பெறும் வெற்றி, தோல்வியை பொறுத்து முதல் 3 இடங்களில் மாற்றம் ஏற்படலாம். ஆனால், 4வது இடத்துக்கு மட்டும் கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன.

இன்றைய போட்டியில் 6வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் - 7வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸிடம் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 12 புள்ளிகள் பெற்று 5வது இடத்துக்கு முன்னேறும். எனவே, இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. ஒரு சில போட்டிகளில் சறுக்கினாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கில் மிரட்டுகிறது. இந்த அணியின் 19 வயதான துவக்க வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால், சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் 21 பந்தில் 50 ரன் அடித்து மிரட்டல் பார்மில் உள்ளார். மறுமுனையில் எவின் லூயிஸ், கேப்டன் சஞ்சு சாம்சன், சிவம் துபே, டேவிட் மில்லர் உள்ளனர். பந்து வீச்சில் முஸ்டபிசுரை தவிர மற்றவர்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

மும்பை இந்தியன்சை பொறுத்தவரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, பொல்லார்டு மற்றும் பாண்ட்யா சகோதரர்கள் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்து வீச்சில் போல்ட் மட்டுமே நம்பிக்கை தருகிறார். பும்ராவும் சரியான பார்மில் இல்லை. பெரிய போராட்டம் நடத்தித்தான் மும்பை ஜெயிக்க வேண்டும். ரன்ரேட்டில் பின்தங்கி உள்ளதால் இருவரில் யார் தோற்றாலும் பிளே-ஆப்புக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இல்லையென உறுதியாக கூறலாம்.

Related Stories:

More
>