×

தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் காசநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடர்பு விழிப்புணர்வு மேம்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி, சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களில்  தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன்  அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்த போது நாடு முழுவதும் 15 லட்சம் பேருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 3.40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 59,164 பேர் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தனியார் மருத்துவமனைகளில் 12,851 பேரும், அரசு மருத்துவமனைகளில் 46,313 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 2020ம் ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 51,751 ஆக இருந்தது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tamil Nadu ,Health Department , Tamil Nadu, Tuberculosis, Health Department
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...