பாதாள சாக்கடை பள்ளத்தால் விபத்து பொன்னேரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

பொன்னேரி: பாதாள சாக்கடை பள்ளத்தால் விபத்து ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின்படி கடந்த 2 ஆண்டுகளாக பணி தொடங்கப்பட்டது. இதற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில், 9வது வார்டில் உள்ள தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து புகாரளித்தும் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டிவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பொன்னேரி பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு கண்டன கோஷமிட்டனர்.  

தகவலறிந்த பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு மற்றும் பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் உடனடியாக பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும். தெருக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் வாக்குறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: